| ADDED : மே 17, 2024 07:16 AM
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் குறைவழுத்த மின் விநியோகம் செய்யப்படுவதால் அன்றாட பணிகள் பாதிக்கிறது என தர்மர் எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்துார், சாயல்குடி, கடலாடி, கமுதி, திருவாடானை, ஆர்.எஸ்., மங்கலம், ராமேஸ்வரம், தொண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக குறைவழுத்த மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் தினமும் 15 தடவைக்கும் மேல் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.இதன் காரணமாக வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் இயக்க முடியாமல் உள்ளதுடன் சேதம் அடைகின்றன. மேலும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டது. தற்போதைய திராவிட மாடல் ஆட்சியில் அதிகமான மின்தடையால், பருத்தி, மிளகாய் சாகுபடி செய்த விவசாயிகள் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர்.இதனால் விவசாயிகள் உட்பட வியாபாரிகள் பலரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதே நிலை நீடித்தால் பொதுமக்களை திரட்டி மாவட்டம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.