சுற்றுலா தலங்களை சீரமைக்க முயற்சி இல்லை; அதிகாரிகள் அலட்சியம்; விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் தொடரும் அவலம்
வாலிநோக்கம், மார்ச் 6- ராமநாதபுரம் மாவட்டத்தில் பழமையும் புராதன சிறப்பும் கொண்ட ஏராளமான வரலாற்று பின்னணி கொண்ட சுற்றுலா தலங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ள நிலையில் அவற்றை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ராமேஸ்வரம், பாம்பன் பாலம், தனுஷ்கோடி, ஓரியூர், தேவிபட்டினம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, சேதுக்கரை, ஏர்வாடி தர்ஹா, வாலிநோக்கம் கடற்கரை, அரியமான் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ள நிலையில் மத்திய மாநில அரசுகளின் நிதியால் செயல்படும் சுற்றுலாத்துறை பெயரளவிற்கு செயல்படுவதாக சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்தனர்.சுற்றுலா பயணிகள் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா துறை பராமரிப்பில் உள்ள இடங்களின் விபர பட்டியலை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முறையாக வைக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட கம்பங்களில் உள்ள பெயர் பலகைகள் சேதமடைந்தும் பொலிவிழந்தும் காணப்படுகிறது. சுற்றுலாத் துறைக்கான அரசு மானிய கோரிக்கையில் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்து வரும் நிலையில் முறையாக பராமரிக்காமலும் சுற்றுலாத்துறை செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தாத அவல நிலை தொடர்கிறது.எனவே ராமேஸ்வரத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சுற்றுலாத்துறை அலுவலக அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ராமநாதபுரம் நகரின் முக்கிய இடங்களிலும் சுற்றுலாத்துறை உள்ள பகுதிகளிலும் நிதி ஒதுக்கீடு செய்து புதிய விபர பலகை நிறுவ வேண்டும். சுற்றுலாத்தலங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.