கொள்முதல் நிலையங்களில் தரைதளம் இல்லை: மழைக்கு நெல் மூடைகள் சேதம்
திருவாடானை : திருவாடானையில் திறந்த வெளியில் நெல் மூடைகள் அடுக்கி வைக்கபட்டுள்ளது. தரைத்தளம் இல்லாததால் மழையால் மூடைகள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரத்து 650 எக்டேரில் சாகுபடி பணிகள் துவங்கியது. விவசாய பணிகள் முடிந்து அறுவடை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இத் தாலுகாவில் அரசூர், வெள்ளையபுரம், மங்களக்குடி, குஞ்சங்குளம், திருவெற்றியூர் ஆகிய 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கபட்டுள்ளது. சன்னரகம் குவிண்டாலுக்கு ரூ.2450ம், பொதுரகம் ரூ.2405க்கும் நெல் கொள்முதல் செய்யபடுகிறது. நெல் கொள்முதல் செய்யும் இடங்களில் கான்கீரிட் தளம் இல்லாததால் மழையால் நெல் மூடைகள் சேதமடைந்தன. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நெல் கொள்முதல் செய்யபட்ட மூடைகள் உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பாமல் தேக்கி வைக்கபட்டுள்ளது. சில நாட்களாக திருவாடானையில் மழை பெய்து வருகிறது. அரசூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மூடைகள் வயல் ஓரங்களில் அடுக்கி வைக்கபட்டுள்ளது. மழை பெய்ததால் தார்பாய் போட்டு மூடி வைக்கபட்டுள்ளது. இருந்த போதும் தரைதளம் இல்லாததால் மூடைகள் சேதமடைந்தன. நெல்களில் பிரித்து எடுக்கபட்ட பதர் குவியல்களாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை மாடுகள் மேய்கின்றன. இனி வரும் ஆண்டுகளில் நெல் கொள்முதல் அறிவிக்கப்பட்ட இடங்களில் கான்கீரிட் தளம் அமைத்து நெல்லை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.