ராமேஸ்வரத்தின் அடையாள சின்னம் பாம்பன் ரயில் பாலத்திற்கு வயது 111
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவின் அடையாள சின்னமான பாம்பன் ரயில் பாலம் இன்றுடன் (பிப்., 24) 111 வயதை கொண்டாடுகிறது. இந்தாண்டுடன் பிரியாவிடை பெறுவதால் மக்கள் வேதனையில் உள்ளனர்.பாம்பன் கடலில் ஆங்கிலேயர்கள் அமைத்த ரயில் பாலம் 1914 பிப்., 24ல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அன்று முதல் 2022 டிச., 23ல் வரை ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு ரயிலில் பயணித்த பொதுமக்களை தாங்கிய சுமை தாங்கியாக உள்ளது. 1964 டிச.,22 இரவு தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலால் பாம்பன் ரயில் பாலம் சேதமடைந்தது. பிறகு 60 நாட்களில் மீண்டும் புனரமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.கடந்த 109 ஆண்டுகளாக ராமேஸ்வரம் தீவை இணைக்கும் கேந்திரமாக விளங்கியது. ராமேஸ்வரம் தீவின் அடையாள சின்னமாகவும் திகழ்ந்தது. மக்களின் சுபநிகழ்ச்சி பத்திரிகைகள், தங்கும் விடுதி, ஓட்டல்களில் சுவரில் பாம்பன் ரயில் பாலம் புகைப்படம் சித்திரமாக இடம்பெற்றது. பலவீனமடைந்தது
முதன் முதலாக 2013 ஜனவரியில் பாம்பன் ரயில் பாலம் மீது இந்திய கடற்படை சரக்கு கப்பல் மோதி துாணை சேதப்படுத்தியது. 25 நாட்களுக்கு ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. பிறகு 2018ல் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலவீனம் ஆனதால் 65 நாட்களுக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின் 2022 டிச., 23ல் மீண்டும் துாக்கு பாலம் இரும்பு பிளேட் சேதமடைந்ததால் அன்று முதல் இன்று வரை ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரியாவிடை பெறுகிறது
பாம்பன் ரயில் பாலம் இன்றுடன் 111 வயதை கடந்து 112வது வயதை அடியெடுத்து வைக்கிறது. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாம்பன் ரயில் பாலம் பலவீனத்தால் பிரியாவிடை பெறுவதை நினைத்து மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.