உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கள்ளிக்கோட்டை சிவன் கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டுகள் சிதையும் கோயிலை பாதுகாக்க கோரிக்கை

கள்ளிக்கோட்டை சிவன் கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டுகள் சிதையும் கோயிலை பாதுகாக்க கோரிக்கை

பரமக்குடி : பரமக்குடி அருகே கள்ளிக்கோட்டை சிவன் கோயிலில் பாண்டியர் கால இரு துண்டு கல்வெட்டுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது. மேலும் அழியும் நிலையில் உள்ள இக்கோயிலை பாதுகாக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: கள்ளிக்கோட்டை சிவன் சன்னதியில் 6 துண்டு கல்வெட்டுகளையும், அம்மன் சன்னதியில் ஒரு கல்வெட்டையும் அமர்நாத் ராமகிருஷ்ணன் குழுவினர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். மேற்பகுதி முழுவதும் இடிந்துள்ள சிவன் சன்னதி முன்பு மண்டபத்தின் கீழே ஜகதியின் பக்கவாட்டிலும், மேற்பகுதியிலும் மேலும் இரு துண்டு கல்வெட்டுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதிய கல்வெட்டு

13ம் நுாற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு இங்கு உள்ளது. இதில் உள்ள இரண்டு வரிகளில் ஸ்ரீ கோமாற பன்மாறான திரிபுவனச் சக்கரவர்த்தி என குறிப்பிடப்படுவது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனாக இருக்கலாம். மற்றொரு 4 வரி கல்வெட்டில் இக்கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்தில் ஐப்பசிக் குறுவை விளையும் காலத்துக்கு ஒன்று பாதியும், (சந்தி) விக்கிரகப்பேறு ஆகிய வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் மிழலைக்கூற்றம், திருக்கானப்பேற் கூற்றம் ஆகிய கூற்றங்களின் பெயர்கள் வருகிறது.

கோயில் வரலாறு

மதுரை பராக்கிரம பாண்டியன், திருநெல்வேலி குலசேகர பாண்டியன் இடையே கி.பி.12ம் நுாற்றாண்டில் துவங்கிய வாரிசு உரிமைப் போர் அவர்கள் மகன்கள் விக்கிரமபாண்டியன், வீரபாண்டியன் என மாறி மாறி ஆட்சியில் இருப்பதற்காக தொடர்ந்து நடந்தன. விக்கிரம பாண்டியன் மகன் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன், பாண்டிய நாட்டில் வீராபிஷேகம் செய்ய முனைந்த போது, அதை எதிர்த்ததால் மட்டியூர், கள்ளிக்கோட்டை ஆகிய ஊர்களில் போர் நடந்தது. இக்கோயிலில் உள்ள பாண்டியர் கால துண்டு கல்வெட்டுகளின் சொற்களைக் கொண்டு இவை முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுடையது எனக் கருதலாம். அம்மன் சன்னதியில் உள்ள கி.பி.1538ம் ஆண்டு கல்வெட்டில் நாடாமங்கலமான சுந்தரத்தோள் நல்லுார் என இவ்வூரும், நயினார் தவச்சக்கரவர்த்திஸ்வரமுடைய நயினார் என இறைவனும் அழைக்கப்பட்டுள்ளார்.அம்மன் சன்னதி அரை துாணில் நர்த்தன கணபதி, முருகன், நின்ற நிலையில் லகுலீ சபாசுபதரின் சிறிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு கைகளுடன் நின்ற நிலையிலான லகுலீசபாசுபதர் சிற்பம் அறிய வகையாகும்.பெரும்பாலும் சிற்பங்கள் அமர்ந்த நிலையிலேயே கிடைத்துள்ளன. இக்கோயிலில் கோளகி மடம் செயல்பட்டுள்ளது. சைவ மடங்களில் துறவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் பணியை செய்து வந்த இதில் பாசுபதம், லகுலீச பாசுபதம், காளாமுகம் ஆகிய பிரிவினர் இருந்துள்ளனர். இங்குள்ள ஒரு பாண்டியரின் துண்டு கல்வெட்டு இக்கோயிலில் இருந்த கோளகி மடம், அதன் ஆச்சாரியர் அவருடைய சிஷ்யர்கள் பற்றி குறிப்பிடுகிறது. மேற்கு நோக்கிச் சாய்ந்த நிலையில் சிறிய லிங்கம், லகுலீசபாசுபதர் சிற்பம், கோளகி மடம் ஆகியவற்றால் பாண்டிய வம்சாவழியினர் அல்லது சித்தர் போன்றோரின் பள்ளிப்படை கோயிலாக, பாண்டியர், சோழர் போருக்குப்பின், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் இக்கோயில் கட்டப்பட்டு இருக்கலாம்.பாண்டியர், சோழர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்து, அழியும் நிலையில் உள்ள இக்கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து பாதுகாக்க ஹிந்து சமய அறநிலையத்துறை ஆவண செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ