பஸ் ஸ்டாண்டில் கால அட்டவணையின்றி திருவாடானையில் பயணிகள் தவிப்பு
திருவாடானை: திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் புறப்படும் நேரத்தை குறிக்கும் கால அட்டவணை இல்லாததால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.திருவாடானை பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு, தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் எந்த நேரத்தில் பஸ்ஸ்டாண்டிற்குள் வரும், எப்போது புறப்படும் என்பதை அறிய பஸ் கால அட்டவணை இல்லை. இதனால் பஸ் இயக்கப்படும் நேரம் தெரியாமல் பஸ்ஸ்டாண்டுகளில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பயணிகள் கூறியதாவது: குறிப்பிட்ட பஸ் எப்போது வரும் என்று நேர காப்பாளர், கடைக்காரர்களிடம் விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது. கால அட்டவணை இருந்தால் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் பஸ் வரும் நேரம் தெரியாமல் மிகவும் சிரமமாக உள்ளது. இரவு நேரத்தில் கடைசி பஸ்களுக்கு செல்ல விசாரிக்க கூட ஆட்கள் இல்லாமல் தவிக்கிறோம். ஆகவே பஸ்கள் வந்து சேரும் நேரம், புறப்படும் நேரம் குறித்து தெளிவான கால அட்டவணை வைக்க அரசு போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.