நிழற்குடை அமைக்க பயணிகள் கோரிக்கை
பரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் போதிய நிழற்குடை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் மழை, வெயிலில் சிரமப்படுகின்றனர்.பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் கிராமப்புறங்கள் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லும் பஸ்களை நிறுத்த குறைவான ரேக்குகள் உள்ளன. மதுரை, ராமேஸ்வரம் ரேக் பகுதி தவிர எங்கும் நிழற்குடைகளும் கிடையாது. இதனால் பள்ளி மாணவர்கள், பயணிகள் தொடர்ந்து மழை நேரங்களில் கைக்குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் சிரமப்படுகின்றனர். தண்ணீர் வசதி இல்லாத பஸ் ஸ்டாண்டில் நிழல் தேடி அலைகின்றனர். எனவே இருக்கும் இடத்தில் பஸ்களை நிறுத்த வசதி ஏற்படுத்துவதுடன், ஒட்டுமொத்தமாக நிழற்குடை வசதி செய்து தர வேண்டும்.