நகராட்சி குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் பீதி
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி 11, 12 வது வார்டுகளில் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவதால் மக்கள் நோய் தொற்று பீதியில் உள்ளனர்.பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழியாக நகராட்சி சார்பில் பரமக்குடி வைகை ஆற்றில் இருந்து உறிஞ்சு கிணறுகள் அமைத்து குடிநீர் எடுக்கப்படுகிறது. மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலும் அதிகளவு குடிநீர் கிடைக்கிறது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு சில பகுதிகளில் பதிக்கப்பட்ட குழாய்கள் கழிவு நீர் கால்வாய் வழியாக செல்கிறது. இதனால் சில இடங்களில் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் அவ்வப்போது கலந்து விடுகிறது. பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து கிடைக்கும் தண்ணீர் பெரும்பாலும் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து ஆண்டுக் கணக்கில் புகார்கள் வரும் நிலையில் அதிகாரிகள் அவ்வப்போது சரி செய்கின்றனர். அதே நேரம் 11 மற்றும் 12 வது வார்டுக்கு உட்பட்ட கருப்பண்ணசாமி கோவில் தெரு, எஸ்.எஸ்., கோவில் தெரு, வேதாந்த மடம் தெரு, புளிய மர தெரு என குறிப்பிட்ட தெரு குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவது அதிகரித்துள்ளது.இதனால் மக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாமல் உள்ளத்துடன், அறியாமல் குடிப்பவர்கள் தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். மேலும் குடிநீர் வரி செலுத்தும் நிலையில் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.எனவே உடனடியாக நகராட்சி அதிகாரிகள் குடிநீரை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.