உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயில் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அவதியில் பக்தர்கள்

ராமேஸ்வரம் கோயில் ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அவதியில் பக்தர்கள்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகள், சன்னதி தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகள், தள்ளு வண்டி சவாரியால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இக்கோயிலுக்கு தினமும் நாடு முழுவதுமிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அக்னி தீர்த்த கடலில் நீராடி முடித்து கோயில் வளாகத்திலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடி தரிசனம் செய்கின்றனர்.கோயிலை சுற்றியுள்ள நான்கு ரதவீதிகள், சன்னதி தெருவில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து 2013ல் கோயில் நான்கு ரதவீதிகள், சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரையில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் பக்தர்கள் சிரமமின்றி நீராடி, தரிசனம் செய்தனர்.இச்சூழலில் முதியவர்கள், குழந்தைகள் ரதவீதிகளில் செல்ல சிரமம் ஏற்பட்டதால் கோயில் நிர்வாகம், பசுமை ராமேஸ்வரம் அமைப்பு சார்பில் பேட்டரி கார்கள் இயக்கப்பட்டன. இந்த பேட்டரி கார்களும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதியதாக இல்லை. இதனால் ரதவீதிகளில் டிரைசைக்கிளில் பக்தர்களை கட்டணம் பெற்று சிலர் ஏற்றிச்செல்கின்றனர். இதில் டிரைசைக்கிள் பக்கவாட்டில் உள்ள இரும்பு கம்பியில் அமர்ந்து பக்தர்கள் செல்வதால் கீழே விழும் அபாயம் உள்ளது.நான்கு ரத வீதிகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் உயர் அதிகாரிகள், அவர்களது உறவினர்கள் வாகனங்களை அனுமதிக்கின்றனர். ரத வீதிகள், சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரை சாலையை 200க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இத்துடன் ஓட்டல்கள், டீக்கடைகள், விளையாட்டு பொருள்கள் விற்கும் கடைக்காரர்களும் சாலை, நடைபாதையை ஆக்கிரமித்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி கோயிலில் தரிசனம் செய்கின்றனர். கோயிலில் தரிசனம் முடித்து தெற்கு, கிழக்கு வாசல் வழியாக வரும் பக்தர்களை திருநங்கைகள், பிச்சைக்காரர்கள் மறித்து பணம் கேட்டு தொடர்ந்து சென்று தொல்லை தருகின்றனர். ஆண்டுக்கு ஒரு கோடி பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் போதுமான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் இல்லை.

அதிகாரிகள் ஆசியுடன் ஆக்கிரமிப்புகள்

ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் ஆசியுள்ளதால் ஆக்கிரமிப்பு கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ரத வீதிகளில் உயர்அதிகாரிகளின் பல வாகனங்கள் ஆங்காங்கு கண்டபடி நிறுத்தப்படுகின்றன என்றார்.ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை:ராமேஸ்வரம் தாசில்தார் செல்லப்பா கூறியதாவது: கோயில் ரதவீதிகள் மற்றும் நகர் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை