ஓய்வு பெறும் தொழிலாளர்களை வழியனுப்ப பஸ் வழங்க மறுப்பு
ராமநாதபுரம்: -அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வு பெறும் தொழிலாளர்களை வீட்டிற்கு வழியனுப்ப பஸ்களை வழங்க வேண்டும்என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளில் அவர்களை அந்தந்த பணிமனைகளில் விழா நடத்தி வழியனுப்ப அந்த கிளையில் உள்ள அரசு பஸ்சை வழங்கி வீடு வரை உடன் பணிபுரியும் தொழிலாளர்கள், உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு வருவது வழக்கமாக நடக்கிறது. தற்போது நிர்வாகத்தினர் இதை மறுத்து வருகின்றனர். தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி பின் பஸ் வழங்கப்படுகிறது. ஓய்வு பெறும் தொழிலாளர்களை வெறுங்கையுடன் எந்த பணப்பலனும் வழங்காமல் வீட்டுக்கு அனுப்பும் நிர்வாகம் அரசு பஸ் கூட வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம் என தொழிற்சங்கத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.இதுகுறித்து காரைக்குடி மண்டல சி.ஐ.டி.யு., பொதுச்செயலாளர் தெய்வீரபாண்டியன் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநருக்கும், பொது மேலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் நாளன்று அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சக பணியாளர்களுடன் பஸ்சில் அழைத்து செல்லப்பட்டு கவுரவிக்கப்படும் நடைமுறை இருந்து வந்தது. இதனை படிப்படியாக நடைமுறைப்படுத்தாத நிலை உள்ளது வருத்தத்திற்கு உரியது. பணியாளர்களை தான் பணிபுரிந்த நிறுவனத்தின் மூலம் பணி ஓய்வு நாளன்று சிறப்புடன் கவுரவிப்பது நிறுவனத்தின் கடமையாகும். அனைத்து பணியாளர்களையும் ஓய்வு நாளில் கவுரவிக்கும் வகையில் அரசு பஸ் வசதி செய்து கொடுத்து வழியனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.