வருவாய்த்துறையினர் போராட்டம்; நலத்திட்டம் பெற முடியாமல் தவிப்பு
திருவாடானை; வருவாய்த்துறையினர் போராட்டத்தால் நலதிட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் தவித்தனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று திருவாடானை தாலுகா அலுவலகம் பூட்டப்பட்டதால் மாணவர்களுக்கான ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களும், பட்டா மாறுதல், நில அளவை உள்ளிட்ட அடிப்படை தேவைகளும் கிடைக்காமல் முடங்கியது. நேற்று தொண்டியை சேர்ந்த சிலர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். அலுவலகம் பூட்டியிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவர்கள் கூறியதாவது:நலதிட்ட உதவிக்காக நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு சென்று கலெக்டரை நேரில் சந்தித்தோம். அவர் நாளை (இன்று) திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு சென்று உங்கள் கோரிக்கைகளை கூறுங்கள் என்றார்.அதன்படி இன்று தாலுகா அலுவலகத்திற்கு வந்தோம். ஆனால் அலுவலகம் பூட்டியிருந்ததால் ஏமாற்றமாக இருந்தது. எனவே திரும்ப ஊருக்கு செல்கிறோம் என்றனர்.