ராமேஸ்வரத்தில் மீன்களுக்கு தட்டுப்பாடு
ராமேஸ்வரம்: சூறாவளியால் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்ததால் ராமேஸ்வரத்தில் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்தது.வங்கக் கடலில் சூறாவளி வீசி கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்ததால் ஆக.21 முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் உள்ள 2000 விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.இதனால் ராமேஸ்வரம் பகுதியில் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மீனவர்கள் கரையில் நின்றபடி கடலில் வீசிய வலையை இழுக்கும் கரை வலையில் சிக்கிய மீனுக்கு மவுசு அதிகரித்தது. இந்நிலையில் நேற்று தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடலோரத்தில் கரை வலையில் ஒரு கிலோ சிறியரக நகரை, வெளமீன், ஊடகம் ஆகிய மீன்கள் ரூ.400க்கும் (கடந்தவார விலை ரூ.300), கணவாய் ரூ.300 ( கடந்தவார விலை ரூ.200) விற்றனர்.நேற்று காற்றின் வேகம் தணிந்ததால் 5 நாட்களுக்குப் பின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.