உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேளாண்மை அலுவலகத்தில் 20 டன் விதை நெல் இருப்பு

வேளாண்மை அலுவலகத்தில் 20 டன் விதை நெல் இருப்பு

திருவாடானை : திருவாடானை வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் கிடைக்காததால் விவசாயிகள் தவித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து நேற்று 20 டன் டீலக்ஸ் பொன்னி விதை நெல் இறக்குமதி செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்ட நெற்களஞ்சியமாக திருவாடானை தாலுகா திகழ்கிறது. விவசாயமே பிரதான தொழிலாக உள்ள இந்த தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது. விவசாயிகளை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது.அதன்படி விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. திருவாடானை தாலுகாவில் உயர் விளைச்சல் தரும் சன்ன ரகங்கள் டீலக்ஸ் பொன்னி, ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., போன்ற நெல் விதைகளை விவசாயிகள் விதைப்பது வழக்கம். வேளாண் அலுவலகத்தில் போதுமான விதை நெல் கையிருப்பு இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கவாஸ்கர் கூறுகையில், விதைகள் வேளாண் அலுவலகத்தில் கையிருப்பு இல்லாதது கவலையாக உள்ளது. தற்போது திருவாடானை தாலுகாவில் நேரடி நெல் விதைப்பு பணிகள் துவங்கியுள்ளது. டீலக்ஸ், ஆர்.என்.ஆர்., ஆகிய விதை நெல் அத்தியாவசிய தேவையாக உள்ளது.வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் கிடைக்காததால் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார். இது குறித்து நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை 20 டன் டீலக்ஸ் பொன்னி, வேளாண் அலுவலக கோடவுனில் இருப்பு வைக்கப்பட்டது.விதை நெல் விற்பனைக்கு தயாராக இருப்பதால் விவசாயிகள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ