கிலோ ரூ.3,000 மல்லிகைக்கு கிராக்கி
ராமநாதபுரம்:தொடர் முகூர்த்தம் காரணமாக திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கின்றன. இதனால் பூக்கள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், மல்லிகை பூ விலை உச்சபட்சமாக கிலோ, 3,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பிச்சிப்பூ ஒரு கிலோ, 1,200, முல்லை, 1,000, செவ்வந்தி, 350, சம்பங்கி, 400, ரோஜா, 300, செண்டுமல்லி, 120 ரூபாய் என, அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்தது.பூ வியாபாரி கே.முனியசாமி கூறியதாவது:தொடர் முகூர்த்த நாட்களால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. மதுரையில் மல்லிகை கிலோ 2,500 ரூபாய்க்கும், ராமநாதபுரத்தில், 3,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மதுரை, நிலக்கோட்டை, அருப்புக்கோட்டை, திண்டுக்கல், உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து தான் பூக்கள் அதிகளவில் வருகின்றன. அவற்றின் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி தினத்தில் கூட கிலோ, 1,300 ரூபாய்க்கு தான் விற்பனையானது.இவ்வாறு அவர் கூறினார்.