டவுன் பஸ்சில் பிரேக் பிடிக்காததால் டயர் அடியில் கல் வைத்து நிறுத்தம்
திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இருந்து திருவெற்றியூர் செல்லும் டவுன் பஸ்சில் பிரேக் பிடிக்காததால் டயர் அடியில் கல்லை வைத்து கண்டக்டர் நிறுத்தினார்.திருவாடானை பஸ் ஸ்டாண்டில் இருந்து டி.என்.63- நா1501 டவுன் பஸ் திருவெற்றியூர் நோக்கி நேற்று காலை 8:00 மணிக்கு புறப்பட தயார் ஆனது. பயணிகள் அமர்ந்திருந்தனர். டிரைவர் பஸ்சை ஓட்ட ஆயத்தமானார். அப்போது பிரேக் பிடிக்காமல் பஸ் பின்னால் நகர்ந்தது. அதிர்ச்சியடைந்த கண்டக்டர் அருகில் கிடந்த கல்லை எடுத்து டயருக்கு அடியில் வைத்தார். அதனை தொடர்ந்து பயணிகள் கீழே இறங்கினர். 8:30 மணிக்கு மாற்று பஸ் இயக்கப்பட்டதால் அந்த பஸ்சில் பயணிகள் சென்றனர். பயணிகள் கூறுகையில், சில டவுன் பஸ்களில் பிரேக் பிடிக்காதது, உள்ளே விளக்கு எரியாதது என பல பிரச்னைகளுடன் இயக்கப்படுகின்றன. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிரமமாக உள்ளது என்றனர்.