உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி தேரோட்டம்
ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப் பெற்றுள்ளதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். இந்த விநாயகர் கோயிலில் ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது. இந்த ஆண்டு ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மாலையில் வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. விழாவின் எட்டாம் நாளான நேற்று முன்தினம் செப்.5 ல் சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று மாலை 5:20 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இன்று காலை 10:30 மணிக்கு நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரி, பக்தர்கள் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதுடன் விழா நிறைவடைகிறது.