ரேஷனில் காலாவதி பொருள் விற்பனையாளர் சஸ்பெண்ட்
ராமநாதபுரம்: ரேஷனில் காலாவதியான ரவை, சேமியா பாக்கெட்டுகளை விற்பனை செய்த விற்பனையாளர் சங்கர் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எட்டுக்குடியில் உள்ள ரேஷன் கடையில் காலாவதியான ரவை, சேமியா பாக்கெட்டுகளை விற்பனை செய்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜீனு உத்தரவில்கூட்டுறவு பொதுவினியோக திட்ட அதிகாரிகள் எட்டுக்குடி ரேஷன் கடையில் ஆய்வு செய்தனர்.அப்போது காலாவதியான ரவை, சேமியா பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. அப்பொருட்களை அப்புறப்படுத்தி, பணியில் கவனக்குறைவாக இருந்த கடை விற்பனையாளர் சங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்து ராமநாதபுரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜீனு உத்தரவிட்டார்.