100 நாள் வேலை திட்டத்தை கிராமத்தில் வழங்க வேண்டும்
கடலாடி: கடலாடி ஒன்றியத்தில் பல கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படாமல் முடங்கியுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். சாயல்குடி பா.ஜ., மாவட்ட துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: மத்திய அரசு நிதி மூலம் வழங்கக்கூடிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் பல கிராமங்களில் பயன்பாடின்றி உள்ளது. இதனால் பல கிராமங்களில் சாலையோரங்களில் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. நுாறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் மூலமாக முன்பு சாலையோர சீமைக் கருவேல மரங்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பணிகளின் மூலமாக வேலைகள் நடக்கும். தற்போது பணிகள் வழங்காமல் உள்ளனர். அரசு நிர்ணயித்த சம்பளத்தை காட்டிலும் குறைவாக பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் மத்திய அரசின் நிதிநிலை பெற்று வழங்கக்கூடிய 100 நாள் திட்டத்தை முடக்கி வைக்கும் சூழல் உள்ளது. இதனால் மத்திய அரசிற்கு கெட்ட பெயர் உண்டாக்க முயல்கின்றனர்.இந்நிலையை விளக்கி பா.ஜ., சார்பில் பல்வேறு இடங்களில் தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். எனவே கிராம மக்களின் அன்றாட வாழ்விற்கான 100 நாள் வேலை திட்ட பணிகளை முறையாக கிராமங்கள் தோறும் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.