மாநில அளவில் முதல், 2ம் பரிசு மகளிர் நெசவாளர்களுக்கு பாராட்டு நெசவே வாழ்வு என நெகிழ்ச்சி
பரமக்குடி: பரமக்குடியில் மகளிர் கைத்தறி நெசவாளர்கள் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற நிலையில் பாராட்டு விழா நடந்தது.பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதியில் கைத்தறி காட்டன் சேலையில் நெய்யப்பட்ட துாக்கணாங்குருவி மற்றும் பாம்பன் பாலம் டிசைன் சேலைகள் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் பெற்றன. அன்னை சாரதா மகளிர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் பிரேமா முதல் பரிசு ரூ. 5 லட்சம் மற்றும் லோகமான்ய திலகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் அலமேலு 2ம் பரிசு ரூ. 3 லட்சம் பெற்றார்.இதன்படி சேலையில் மரத்தில் துாக்கணாங்குருவி கூட்டில் தனது மூன்று குஞ்சுகளுடன் உள்ள நிலையிலும், பார்டர்கள் முழுவதும் குருவிகள் இருக்கும் வகையில் நெய்யப்பட்டுள்ளது. மேலும் நெசவே வாழ்வு என நெகிழ்ச்சியூட்டும் வகையில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இதேபோல் ராமேஸ்வரம் கடலில் பழைய பாம்பன் பாலத்தை நினைவூட்டும் வகையில் நெய்யப்பட்ட சேலை இரண்டாம் பரிசு பெற்றது. இதன் பார்டர்களில் படகு உருவம் தத்ரூபமாக நெய்ப்பட்டுள்ளது. இந்த மகளிர் நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனர் சேரன் தலைமையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கைத்தறி நெசவுகளுக்கு என முதல் பரிசு பரமக்குடி சரகம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.