கள்ளப்படகில் இலங்கை சென்ற 3 அகதிகள்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே கள்ளத்தனமாக படகில் இலங்கை செல்ல முயன்ற 3 அகதிகள் இலங்கை கடற்படையினரிடம் சிக்கினர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் 2023 ல் இலங்கை முல்லைத்தீவை சேர்ந்த சாருசன் 30, மனைவி அம்பிகா 28, மகன் ஜான் ஆண்ட்ரியன் 3, மூவரும் இலங்கை மன்னாரில் இருந்து கள்ளத்தனமாக படகு மூலம் அகதியாக தனுஷ்கோடி வந்தனர். இவர்கள் ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் தங்கி உள்ளனர். இங்கு வேலையின்றி வருவாய் இல்லாமல் தவித்த நிலையில் இலங்கையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதால் மீண்டும் இலங்கை செல்ல சாருசன் முடிவு செய்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு மண்டபம் கடற்கரையில் நிறுத்தி இருந்த ஒரு மீனவரின் பைபர் கிளாஸ் படகை திருடிக் கொண்டு சாருசன் உள்ளிட்ட மூவரும் படகில் ஏறி கள்ளத்தனமாக இலங்கை தலைமன்னார் நோக்கி சென்றனர். அப்போது மன்னார் வளைகுடா கடலில் ரோந்து சுற்றிய இலங்கை கடற்படை வீரர்கள் இப்படகை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் மூவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரிந்ததும் மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கள்ளப்படகு குறித்து மண்டபம் போலீசார் விசாரிக்கின்றனர்.