கோவை-தொண்டி சென்ற ஆம்னி பஸ்சில் 31 பவுன் நகை திருட்டு
திருவாடானை: கோவையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சென்ற ஆம்னி பஸ்சில் 31 பவுன் நகை திருடு போனது. திருடு போன இடம் தெரியாததால் நகையை பறிகொடுத்த பெண் தவிக்கிறார். திருவாடானை அருகே கீழ்க்குடி கிராமத்தை சேர்ந்தவர் தொண்டியம்மாள் 50. கோவையில் உள்ள பேரனின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் கோவையிலிருந்து தொண்டி சென்ற ஆம்னி பஸ்சில் கீழ்க்குடிக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அவருடன் உறவினரான மற்றொரு பெண்ணும் வந்துள்ளார். இருவரும் படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையில் பயணம் செய்தனர். தொண்டி அருகே தினையத்துாரில் இறங்கி நகைப் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் நகை இல்லை. அதிர்ச்சியடைந்த தொண்டியம்மாள் திருவாடானை போலீசில் புகார் செய்தார். கோவையிலிருந்து புறப்பட்ட பஸ் ஒட்டன்சத்திரத்தில் 10 நிமிடம் நின்றது. அப்போது இருவரும் நகைப் பெட்டியை பஸ்சில் வைத்து விட்டு காபி சாப்பிட சென்றனர். தொண்டி அருகே தினையத்துாரில் இறங்கி நகை வைத்துள்ள பெட்டியை பார்த்த போது நகை திருடு போனது தெரிந்தது. ஒட்டன்சத்திரத்தில் திருடு போனதா, அல்லது வரும் வழியில் பஸ்சில் பயணம் செய்தவர்கள் திருடினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். ஒட்டன்சத்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.