பரமக்குடி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலி அதிகாலை பயணத்தால் நேர்ந்த சோகம்
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அதி காலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலியாகினர். ராமநாதபுரம் செட்டிய தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் 71, பவுண்டு தெருவில் அரிசி கடை வைத்துள்ளார். இவர், மனைவி ஜமுனா 63, மகள் ரூபினி 35, மகன் சரண்ராஜ் 30, நேற்று முன்தினம் இரவு காரில், ராமநாதபுரத்தில் இருந்து குற்றாலம் நோக்கி புறப்பட்டனர். காரை மணக் குடியைச் சேர்ந்த டிரைவர் காளீஸ்வரன் 28, ஓட்டினார். மதுரையில் இருந்து நாகநாதன் 47, ஜெயமாலா 44, வீட்டை காலி செய்து பொருட்களை ஏற்றி மினி லாரியில் வந்தனர். லாரியை டிரைவர் முத்துராஜா 23, ஓட்டினார். லாரி பரமக்குடி நான்கு வழிச்சாலையில் இருந்து இருவழிச்சாலை துவங்கும் நென்மேனி அருகே வந்த போது, ராமநாதபுரம் இருவழிச் சாலையில் இருந்து கார் வந்தது. அதிகாலை 2:00 மணிக்கு காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாயின. இதில் ஜமுனா, ரூபினி, கார் டிரைவர் காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோவிந்த ராஜ் இறந்தார். லாரி டிரைவர் முத்துராஜா, நாகநாதன், ஜெயமாலா, சரண்ராஜ் காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.