உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆன்மிக பூமி ராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகள் அவதி வாகன நெரிசலை தவிர்க்க சுற்றுச்சாலை அவசியம்

ஆன்மிக பூமி ராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகள் அவதி வாகன நெரிசலை தவிர்க்க சுற்றுச்சாலை அவசியம்

ராமேஸ்வரம்,:ஆன்மிக பூமியான ராமேஸ்வரத்தில் பக்தர்களின் வாகனங்கள் எண்ணிக்கை பெருகி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் திக்குமுக்காடுகின்றனர்.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் கூட்டம் இரு மடங்கு அதிகரித்து பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ராமேஸ்வரம் தீவுப்பகுதி குறுகிய நிலப்பரப்பை கொண்டதால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2.5 கி.மீ.,ல் உள்ள கோயிலுக்கு செல்ல ஒரே ஒரு ரோடு மட்டுமே உள்ளது.தற்போது விடுமுறை நாளில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தர்கள் வருவதால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை சாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனை போலீசார் சீர்படுத்தினாலும், எதிர்பாராத வாகனங்கள் வருகையால் போலீசார் திணறுகின்றனர்.

சுற்றுச்சாலை அவசியம்

இங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவகம் முதல் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் வரை 6.5 கி.மீ.,க்கு ரூ.60 கோடியில் சுற்றுச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 4 மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை அமையும் பகுதியை ஆய்வு செய்தனர்.அதன் பின் திட்டத்திற்கான முறையான அறிவிப்பின்றி, நிலத்தை கையப்படுத்த உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்காமல் அரசு கிடப்பில் போட்டு விட்டது. இதனால் தற்போதைய போக்குவரத்து நெரிசலால் வெளியூர் மக்களுடன், உள்ளூர் வாசிகளும் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் வழக்கறிஞர் விஜயகுமார் கூறியதாவது:சில நாட்களாக ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நெரிசலில் அனைத்து மக்களும் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் கூட விரைவாக செல்ல முடியாமலும், மாணவர்கள், முதியோர் நடந்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மீன்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் நெரிசலில் சிக்குவதால், சாலையில் விழும் மீன் கழிவுநீரால் துர்நாற்றம் வீசி பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் பார்க்கிங் வசதி இல்லாத நிலையில் நுாற்றுக்கணக்கான வாகனங்களை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்துவதால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே கோயிலுக்கும், தனுஷ்கோடிக்கும் தனியாக சுற்றுச்சாலை அமைப்பது அவசியம். மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி