உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழை நீர் கடலில் வீணாவதை தடுக்க கோட்டக்கரையில் தடுப்பணை தேவை

மழை நீர் கடலில் வீணாவதை தடுக்க கோட்டக்கரையில் தடுப்பணை தேவை

ஆர்.எஸ்.மங்கலம்: வீணாக கடலில் கலக்கும் மழை நீரை தேக்கி வைக்கும் வகையில் கோட்டைக்கரை ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் சருகணி பகுதியில் இருந்து ஆனந்துார், ஆயங்குடி, செட்டிய கோட்டை, கொக்கூரணி, சனவேலி, அழியா தான் மொழி வழியாக செல்லும் கோட்டைக்கரையாறு கிழக்கு கடற்கரை சாலை சேந்தனேந்தல் ஓடை வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் மழைக் காலங்களில் உபரி நீர் வீணாகிறது. குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வயல்வெளிகள் மற்றும் சிறிய நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியது. வயல்களில் நெற்பயிர்கள் முளைக்காதததால் வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீர் முழுவதையும் விவசாயிகள் வெளியேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் வயல்வெளிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பல லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கோட்டை கரை ஆறு வழியாக கடலில் கலந்தது. கோட்டை கரை ஆற்றில் சாத்தியக் கூறுகள் உள்ள பகுதிகளில் தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் இவ்வாறு உபரி நீர் வீணாவதை தடுக்க முடியும். இதன் மூலம் விவசாயிகள் தங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து விவசாயத்தை மேம்படுத்த முடியும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோட்டை கரை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !