மண்டபம் கடலில் படகு மூழ்கியது ஒரு மீனவர் மாயம் : 3 பேர் தப்பினர்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவரின் படகு மூழ்கியதில் ஒரு மீனவர் மாயமானார். மற்ற 3 மீனவர்கள் நீந்தி கரை திரும்பினர்.ஜூன் 18ல் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகுகளில் சர்புதீன் என்பவரது படகில் பரிது, அனீஸ், மாதவன், இபுராகிம்ஷா 45, ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மண்டபத்தில் இருந்து 10 கடல் மைல் துாரத்தில் (18 கி.மீ.,) மீன்பிடித்தனர். அப்போது சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் படகு நிலை தடுமாறியது. இதனால் படகின் அடிப்பகுதி பலகை உடைந்ததில் கடல்நீர் படகிற்குள் புகுந்து மெல்ல மூழ்கத் துவங்கியது. படகில் இருந்து மீனவர்கள் மிதவை உதவியுடன் நீந்தி கரைக்கு வந்தனர். ஆனால் ராட்சத அலையில் சிக்கிய இபுராகிம்ஷா கரை திரும்பவில்லை. இதனால் அவரது கதி என்னவென்று தெரியாத நிலையில் மண்டபம் மரைன் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.