மழை நீர் சேகரிப்பு குழாய் அமைத்து கிணற்றில் தண்ணீர் சேகரிக்கும் ஆசிரியர்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் கீழரத வீதியை சேர்ந்த ஆசிரியர் பரமேஸ்வரன் வீட்டில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு குழாயால் பல ஆண்டுகளாக கிணற்றில் தண்ணீர் சேகரித்து அதனை மரக்கன்றுகள் வளர்க்கவும் ,வீட்டு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகிறார். முதுகுளத்துார் கீழரத வீதி தெருவை சேர்ந்தவர் ஆசிரியர் பரமேஸ்வரன். அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வீட்டின் பின்புறம் 1982ல் 30 அடி கிணறு அமைத்துள்ளார். அப்போது ஊற்று அதிகமாக புழக்கத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்தது. காலப்போக்கில் தொடர் வறட்சியால் கிணற்றில் தண்ணீரின்றி வறண்டது. கடந்த 1996ல் வீடுகளில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க உத்தரவிட்டதால் வீட்டில் மழைநீர் சேகரிப்பு குழாய் அமைத்தார். தொடர்ந்து முழுமையாக மராமத்து பணி செய்து வந்தார். இதுகுறித்து ஆசிரியர் பரமேஸ்வரன் கூறியதாவது: வீட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் குழாய் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் பருவமழை,கோடை மழை பொய்த்ததால் ஊருணி, கண்மாய், கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டது. பல்வேறு வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி இருந்த இடம் தெரியாமல் அழிந்தது. அது மட்டும் இல்லாமல் முதுகுளத்துாரில் கடந்த சில ஆண்டுகளாகவே வறட்சி நிலவியது. எனது வீட்டில் மழை பெய்தால் மட்டும் மழைநீர் சேகரிக்கப்பட்டு வந்தது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு குழாயால் வறண்டு கிடந்த கிணற்றில் நீரூற்று ஏற்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் தேங்கியுள்ளதால் மகிழ்ச்சி அளிக்கிறது. தேங்கும் தண்ணீரை வீட்டின் பின்புறம் மரக்கன்றுகள் வளர்க்கவும், வீட்டின் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகிறேன். மழைநீர் சேகரிப்பு தொட்டியால் நிலத்தடி நீர் உயரும் நிலை உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மழைநீர் சேகரிப்பு செல்லும் குழாய்களையும் மராமத்து பணி செய்து வருகிறேன். எனவே அனைவரும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்றார்.