பரமக்குடி நகராட்சி வளாகத்தில் பூட்டப்பட்ட ஆதார் சேவை மையம்; அலையும் பொதுமக்கள்
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி வளாகத்தில் இயங்கிய ஆதார் சேவை மையம் பூட்டி கிடப்பதால் பொதுமக்கள் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டையில் 12 இலக்க தனித்துவமான அடையாள எண் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன்படி முகவரி, பயோமெட்ரிக் தகவல்களான புகைப்படம், கருவிழி ஸ்கேன், கைரேகைகள் என சேமிக்கப்படுகிறது.இந்நிலையில் பரமக்குடி நகராட்சி வளாகத்தில் ஆதார் சேவை மையம் இயங்குகிறது. இங்கு பதிவு, புதுப்பித்தல், புதிய அட்டை பெறுதல், வங்கி கணக்குடன் இணைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கிறது. தொடர்ந்து ரேஷன் கடைகளில் சிறு குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் கார்டுடன் ஆதார் இணைப்பது அவசியம் ஆகிறது. மேலும் பள்ளிகளிலும் ஆதார் எண் இணைக்க கேட்கின்றனர்.ஆனால் பரமக்குடி நகராட்சி வளாகத்தில் இயங்கும் ஆதார் சேவை மையம் செயல்படாமல் உள்ளதால் தினம் தோறும் 20க்கும் மேற்பட்டோர் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தேவையில்லாத அலைக்கழிப்பு உண்டாகிறது. ஆகவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக ஆதார் சேவை மையம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.