ராமேஸ்வரம் - மதுரை நெடுஞ்சாலையில் தடுப்பு வேலிகளால் விபத்து அபாயம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரும்பு தடுப்பு வேலிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும் சரக்கு லாரிகள், அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசலுடன் உள்ள ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் அருகே மரைக்கார்பட்டினத்தில் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். இதனால் இப்பகுதியில் சாலை நடுவில் சென்டர் மீடியன் மற்றும் இரும்பு தடுப்பு வேலிகள் வைத்துள்ளனர். இதில் 5 அடி உயரமுள்ள தடுப்பு வேலி சாலை நடுவில் உள்ளதால் டூவீலர், சிறியரக கார் டிரைவர்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ராட்சத தடுப்பு வேலிகளை அகற்றி சென்டர் மீடியன் வைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.