அம்மா உணவகத்தை திறக்க கோரி சாப்பாடு தட்டுடன் வந்த ஆர்வலர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அம்மா உணவகத்தை திறக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோழந்துார் மணி சட்டை அணியாமல் சாப்பாடு தட்டுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துாரை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் மணி. இவர் தொடர்ந்து தினமலர் நாளிதழில் வெளியாகும் செய்திகளை சுட்டிக்காட்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து மக்கள் சேவை செய்கிறார். இதன் தொடர்ச்சியாக தினமலர் செய்தியை சுட்டிகாட்டி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அம்மா உணவகத்தை திறக்க வேண்டும் என சட்டை அணியாமல் கையில் சாப்பாடு தட்டுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் யாசகர்கள், கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டு குறைந்த விலையில் சாப்பாடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 10 மாதங்களாக அம்மா உணவகம் செயல்படவில்லை. ஓட்டல்களில் சாப்பாடு அதிக விலைக்கு வாங்கி ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் கையில் உணவு தட்டுடன் மனு அளிக்க வந்துள்ளேன். மருத்துவமனை வளாகத்திற்குள் உடனடியாக அம்மா உணவகத்தை திறக்க வேண்டும் என்றார்.