பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை புகையிலை
தொண்டி; பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது அதிகமாக உள்ளது. போதை புகையிலை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். தொண்டியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவு போதை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக கல்லுாரிகள், பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவு போதைக்கு அடிமையாகி வருகின்றனர். தொண்டியை சேர்ந்த நிறைய மாணவர்கள் தேவகோட்டை, காரைக்குடி போன்ற நகரங்களில் உள்ள கல்லுாரி மற்றும் பள்ளிகளில் படிக் கின்றனர். நேற்று முன்தினம் தேவகோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை சோதனை செய்தனர். அப்போது தொண்டியை சேர்ந்த இரு மாணவர்களின் பாக்கெட்டுகளில் போதை புகையிலை இருப்பது கண்டுபிடிக்கபட்டது. அவர்களிடம் அந்த புகையிலை பாக்கெட் எங்கு வாங்கனீர்கள் என்று கேட்டதற்கு தொண்டி கடைகளில் வாங்கினோம் என்றனர். உடனடியாக தொண்டி போலீஸ்ஸ் டேஷனுக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சென்று தொண்டி பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள இரு கடைகளை சோதனை செய்தனர். அப்போது 20க்கும் மேற்பட்ட போதை புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யபட்டு, அந்த இரு கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த போதை புகையிலையால் இளைஞர்களும், மாணவர்களும் சீரழிந்து வருவதோடு, அவர்களின் வாழ்க்கையும் கேள்விக் குறியதாகியுள்ளது. அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தியும், விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. போதை புகையிலை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.