பரமக்குடி ஏ.டி.எம்.,ல் இரண்டு நாட்களாக அலறும் அலாரம்
பரமக்குடி: பரமக்குடி போலீஸ் ஸ்டேஷன் அருகில் கனரா வங்கி ஏ.டி.எம்., ரூமில் இரண்டு நாட்களாக அலாரம் ஒலித்தபடி உள்ளதால் அப்பகுதியில் செல்வோர் பதற்றம் அடைகின்றனர். பரமக்குடி ஐந்து முனை பகுதியில் இருந்து இளையான்குடி செல்லும் ரோடு உள்ளது. இப்பகுதியில் ஒருங்கிணைந்த போலீஸ் ஸ்டேஷன் வளாகம் செயல்படுகிறது. இதன் அருகில் கனரா வங்கி ஏ.டி.எம்., அறை செயல்படுகிறது. ஒவ்வொரு ஏ.டி.எம்.,லும் திருட்டு சம்பவங்கள் நடந்தால் அலாரம் ஒலிப்பது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் இரவு துவங்கி அறையில் ஆம்புலன்ஸ் சத்தம் போல் அலாரம் அலறியபடி உள்ளது. இதனால் பொதுமக்கள் பதற்றத்துடன் செல்லும் நிலையில் குடியிருப்போர் இரவில் வீடுகளில் துாங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவித்தும் நேற்று இரவு வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் தவிப்பில் உள்ளனர். மக்களின் பதற்றத்தை தணிக்கும் வகையில் உடனடியாக சீரமைக்க வேண்டும்.