வீடுகளை சூழ்ந்துள்ள நீரால் அமிர்தபுரம் மக்கள் அவதி
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே அமிர்தபுரத்தில் வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீரால் சிரமப்படுகிறோம். அதனை வெளியேற்ற வேண்டும் எனஅப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: அமிர்தபுரத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையால் வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வெளியே சென்றுவர சிரமப்படுகிறோம். இரவு நேரத்தில் பூராண், தேள், பாம்பு போன்றவற்றின் தொந்தரவு உள்ளது. துாக்கத்தை இழந்து தவிக்கிறோம். எனவே உடனடியாக மழைநீரை வெளியேற்ற வேண்டும். தகுதியில்லாத இடத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது என நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். 25 ஆண்டுகளாக வசிக்கிறோம். எங்களுக்கு பட்டா வழங்கி, ரோடு, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்துதர கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.