உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இளம்பெண்களை குறிவைத்து ரகசிய கேமரா அனுமதியில்லாத விடுதிகளிலும் அத்துமீறல் அதிகாரிகள் அலட்சியம்

இளம்பெண்களை குறிவைத்து ரகசிய கேமரா அனுமதியில்லாத விடுதிகளிலும் அத்துமீறல் அதிகாரிகள் அலட்சியம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இளம்பெண்களை குறிவைத்து ரகசிய கேமராக்களை பொருத்தி வீடியோ எடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் அதிகாரிகளின் அலட்சியத்தால் அனுமதி இல்லாத விடுதி, காட்டேஜ்களிலும் இதுபோன்ற அத்து மீறல்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், மீரான் மைதீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பெண்கள் உடை மாற்றும் அறையில் அலைபேசிகள், விலை உயர்ந்த பொருட்களை வைக்க லாக்கர் வசதியும் உள்ளதால் இங்கு பொருட்களை வைத்து விட்டு அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின் உடைமாற்ற வரும் இளம்பெண்களை குறிவைத்து ரகசிய கேமரா உள்ள அறைக்கும், மற்ற பெண்களை வேறு அறைக்கு அனுப்பி விடுவார்களாம்.ஆன்லைனில் வாங்கிய இந்த ரகசிய கேமராவில் இரண்டு ஆண்டுகளாக வீடியோ எடுத்துள்ளனர். கைதானவர்களின் அலைபேசியில் பெண்கள் உடை மாற்றும் 120 வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த வீடியோக்களை இணையதளங்கள், யூடியுப், பிற அலைபேசி எண்களுக்கு பதிவிட்டுள்ளனரா என சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர். இவர்களின் காமக் கொடூர செயலுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் அக்னி தீர்த்த கடற்கரை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல பகுதியில் அரசு அனுமதி இல்லாத காட்டேஜ், வீடுகளை விடுதிகளாக மாற்றி உள்ளனர். இதனை தடுக்க அதிகாரிகள் முன்வராததால் புற்றீசலாய் 100க்கும் மேற்பட்ட அனுமதி இல்லாத காட்டேஜ், விடுதிகள் உள்ளன.எனவே இதுபோன்ற இடங்களிலும் ரகசிய கேமரா பொருத்தி அத்துமீறல் நடக்கிறதோ என்ற அச்சம் பக்தர்களிடம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: புனித நகருக்கு களங்கத்தை ஏற்படுத்திய இருவரையும் குண்டாஸ் வழக்கில் கைது செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் அனுமதி இல்லாத காட்டேஜ், விடுதிகளை சோதனையிட்டு கண்காணிக்க வேண்டும்.குற்றச் செயல்களை பக்தர்கள் கண்டு பிடிப்பதற்கு முன்பே போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால் தான் பக்தர்கள் அச்சமின்றி நீராடி தரிசிப்பார்கள். மேலும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் அக்னி தீர்த்த கரையில் உடைமாற்றும் அறை அமைத்து, தற்போது பராமரிப்பின்றி கிடப்பதால் சீரமைக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ