விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
கமுதி : -கமுதி அருகே புல்வாய்க்குளம் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது. புல்வாய்க்குளம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது. இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புல்வாய்க்குளம் அருகே உள்ள அம்மன் கோயிலில் பிடிமண் வழங்கப்பட்டது. கிராமமக்கள் காப்புகட்டி விரதம் இருந்தனர். அய்யனாருக்கு தினமும் பூஜை நடந்தது. தயார் செய்து வைக்கப்பட்ட குதிரைகள், கருப்பண்ணசுவாமி, ராக்கச்சி, பேச்சியம்மன், பைரவர், சப்த கன்னிமார்கள், உள்ளிட்ட தவழும் பிள்ளைகள் கிராமமக்கள் முக்கிய விதிகளில் ஊர்வலமாக துாக்கி வந்தனர். கடந்தாண்டு விளைந்த தானியங்கள் வைத்து கண் திறப்பு செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்பு அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். மக்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விவசாயம் செழிக்கவும் பருவமழை பெய்ய வேண்டியும் இந்த குதிரை எடுப்பு விழா கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடக்கிறது. விழாவில் கமுதி, முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பங்கேற்றனர்.