ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்
முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் முதுவை சாஸ்தா அறக்கட்டளை சார்பில் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.முதுகுளத்துார் பரமக்குடி ரோடு மின்வாரிய அலுவலகம் எதிரில் முதுவை சாஸ்தா அறக்கட்டளைக்கு பாத்தியமான ஐயப்பன் கோயில் கட்டும் பணி நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்.,9ல் மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் துவங்கி முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனைகள் நடந்தது.நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பாட்டுக்கு பிறகு கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. மூலவரான ஐயப்பனுக்கு நெய், சந்தனம், விபூதி உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.விழாவில் மதுரை ஆதினம், எம்.பி.,தர்மர், முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முதுவை சாஸ்தா அறக்கட்டளை குருநாதர் திருமால், துணை குருநாதர் புயல்நாதன், கவுரவ தலைவர் தாமோதரன், தலைவர் கண்ணதாசன், செயலாளர் அருண்பிரசாத், பொருளாளர் மணிகண்டன் உட்பட நிர்வாகக் குழு நிர்வாகிகள் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஐயப்பன் அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது.