தண்ணீர் வரத்தால் தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு பறவைகள் வருகை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கலில் தண்ணீர் உள்ளதால் சீசனை முன்னிட்டு வெளியூர் பறவைகள் வலசை வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரக்கோட்டை ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன. குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை இனப்பெருக்கம் செய்வதற்காக அக்.,ல் வந்து மார்ச் வரை தங்கி அதன்பின் இடம் பெயர்கின்றன. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழையின்றி அக்., துவக்கத்தில் சரணாலங்களுக்கு பறவைகள் வரவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ராமநாதபுரம், பரமக்குடியில் மழை பெய்து வருகிறது. இதனால் சரணாலயம், கண்மாய், குளங்களில் தண்ணீர் உள்ளது. குறிப்பாக தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் உள்ளது. இதன் காரணமாக பறவைகள் ஏராளமாக வருகின்றன. சுற்றுலா வருபவர்கள் பறவைகளை கண்டு மகிழ்கின்றனர். இனிவரும் நாட்களில் மேலும் பறவைகள் வரவாய்ப்பு உள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.