பொங்கல் தொகுப்பில் கருப்பட்டி பனைத்தொழிலாளர் வலியுறுத்தல்
ராமநாதபுரம்: 'பொங்கல் தொகுப்பில் இந்தாண்டிலாவது கருப்பட்டியை இடம் பெறச் செய்ய வேண்டும்,' என, பனைத்தொழிலாளர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தின் மாநில மரமாக விளங்கும் பனை மரங்கள் அனைத்து விதங்களிலும் வாழ்க்கைக்கு பயன்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட அடையாளமாக உள்ளது. இச்சிறப்பு பெற்ற பனை மரங்கள் பாதுகாப்பு இன்றி ஆண்டுதோறும், செங்கல்சூளை, ரியல் எஸ்டேட் பணிகளுக்காக வெட்டப்படுகின்றன. இந்த பனை மரங்களில் பதனீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சப்படுகிறது. ஆனால் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் எதிர்பார்த்த விலைக்கு விற்க முடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பனை மரங்களை வெட்ட அனுமதி பெற வேண்டும்; ரேஷனில் கருப்பட்டி விற்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பெயரளவில் மட்டுமே உள்ளது. அதை முழுமையாக அமலுக்கு கொண்டு வர வேண்டும். இதுகுறித்து பனைத்தொழிலாளர்கள் கூறியதாவது: பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு (சீனி) பதில் கருப்பட்டி வழங்க வேண்டும் என தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. 2026 ஜன., பொது மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் கருப்பட்டியையும் வழங்கி பனை மரங்களை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யவும் அரசு உத்தரவிட வேண்டும் என்றனர்.