உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிச்சைமூப்பன் வலசை சுற்றுலா மையத்தில் பலத்த காற்றால் படகு போக்குவரத்து நிறுத்தம் பயணிகள் ஏமாற்றம்

பிச்சைமூப்பன் வலசை சுற்றுலா மையத்தில் பலத்த காற்றால் படகு போக்குவரத்து நிறுத்தம் பயணிகள் ஏமாற்றம்

கீழக்கரை; ஏர்வாடி ஊராட்சியில் உள்ள பிச்சை மூப்பன் வலசை கடல் பகுதியில் பலத்த காற்றால் சூழலியல் சுற்றுலாத்தலம் கண்ணாடி இழையிலான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.பிச்சை மூப்பன் வலசை சூழலியல் சுற்றுலா தலத்தில் உள்ள மணல் திட்டு பகுதிக்கு செல்வதற்கு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையின் சார்பில் கண்ணாடி இழையிலான படகு போக்குவரத்து நடக்கிறது. இங்கு கடலுக்குள் அரிய வகை பவளப்பாறைகளின் பல்வேறு வடிவங்களையும், கடல் புற்களையும் கடல்வாழ் உயிரினங்களையும் படகின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்ணாடி வழியாக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். ஒரு வாரமாக பேரலைகளின் தாக்கத்தால் காலை 10:00 முதல் 12:00 மணிக்குள் மட்டுமே படகு போக்குவரத்து நடக்கிறது. அதற்குப்பிறகு படகு போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால் கோடை விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.வனத்துறையினர் கூறியதாவது: தற்போது கச்சா காத்து எனப்படும் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதால் கடலில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ள மணல் திட்டு பகுதிக்கு செல்லும்போது பேரலைகளின் தாக்கம் அதிகம் உள்ளது. மே மாதம் வரை இந்நிலை தொடரும். அதன் பிறகு ஜூலை, ஆக., செப்.,ல் படகு போக்குவரத்து இருக்காது. இக்காலகட்டத்தில் படகுகளை இயக்கினாலும் தெளிவாக அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை காண இயலாது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை