கச்சத்தீவு அருகே மிதந்த மீனவர் உடல் மீட்பு
ராமேஸ்வரம்:கச்சத்தீவு அருகே கடலில் மிதந்த மண்டபம் மீனவர் உடலை இந்திய கடலோர காவல்படை வீரர்கள் மீட்டு மண்டபம் கரைக்கு கொண்டு வந்தனர்.ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து ஜூன் 17 இரவில் சர்புதீன் என்பவரது படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் வீசிய சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு படகு சிக்கி கடலில் மூழ்கியது. மீனவர்கள் 4 பேரும் மிதவை உதவியுடன் நீந்தி மண்டபம் கரை திரும்பினர். ஆனால் மீனவர் இபுராகிம்ஷா 42, கரை திரும்பவில்லை. காணாமல் போன மீனவரை மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை வீரர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை கச்சத்தீவு அருகே மீனவர் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. உடனே இந்திய கடலோர காவல் படை வீரர்கள் சென்று மீனவர் உடலை மீட்டு மண்டபம் கொண்டு வந்து மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.