பரமக்குடியில் பிளக்ஸ் பேனர் வைத்த 34 பேர் மீது வழக்கு
பரமக்குடி: பரமக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைத்த 34 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். பரமக்குடி நகராட்சி மற்றும் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஏராளமான விளம்பர பேனர்களை வைத்திருந்தனர். மேலும் விஜய் கட்சி ஆரம்பித்த நிலையில் ஆங்காங்கே கடந்த வாரம் பேனர் வைத்தனர். இந்நிலையில் குருபூஜை உட்பட பல்வேறு அமைப்பினர் பிளக்ஸ் பேனர்கள் கொடிக் கம்பங்களை வைத்திருந்தனர். இதன்படி ஆற்றுப் பாலம் பகுதியில் பேனர்களை அகற்றிய போது கம்பியில் மின்சாரம் பாய்ந்து பரமக்குடி எஸ்.ஐ., சரவணன் பலியானார். இதையடுத்து பரமக்குடி பகுதிகளில் அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்திருந்ததாக பரமக்குடி டவுன் போலீசார் 8 பேர் மீதும், எமனேஸ்வரம் போலீசார் 2, பரமக்குடி தாலுகா போலீசார் 24 பேர் மீதும் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் போலீசார் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.