ராமநாதபுரத்தில் பராமரிப்பின்றி குழாய்கள் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் காவிரி குடிநீர் குழாய் உடைப்புகளால் வீணாகி நகர், கிராமங்களுக்கு முழுமையாக குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பெயரளவில் வருவதால் குடிநீரை விலைக்கு வாங்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 2306 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் காவிரி குழாய்கள் பராமரிப்பின்றி உடைந்து குடிநீர் வீணாவது வாடிக்கையாகியுள்ளது. இதனால் நகர், கிராமங்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் பெயரளவில் மட்டுமே சிறப்பு நிலை நகராட்சியாக உள்ளது. அடிப்படை வசதியான குடிநீர், பாதாள சாக்கடை பிரச்னைகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளுக்கும் தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 25 லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது. மேலும் தற்போது பாதாள சாக்கடை, ஜல்-ஜீவன் திட்டக் குழாய்கள் பதிக்கும் பணியால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு காவிரி குடிநீர் குளம் போல ரோடுகளில் தேங்கி வீணாவது வாடிக்கையாகியுள்ளது.இதன் காரணமாக ராமநாதபுரம் நகர், பட்டணம்காத்தான், சக்கரகோட்டை, சூரன்கோட்டை கிராமங்களில் அன்றாட குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. பெயரளவில் குடிநீர் வருவதால் மக்கள் தனியார் லாரிகளில் குடம் ரூ.13க்கு விலை கொடுத்து வாங்குகின்றனர். சில நாட்களாக ராமநாதபுரம் நகரில் வண்டிக்காரத்தெரு, ஆசாரித்தெரு, பட்டணம்காத்தான், சேதுபதிநகர் ஆகிய இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் குளம் போல தேங்குகிறது.இவ்விஷயத்தில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர். கோடை காலம் என்பதால் குடிநீர் வீணாவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.