உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் மந்தம்

திருவாடானையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் மந்தம்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கிய நிலையில் இதுவரை 1 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. வீட்டிற்கு வரும் அலுவலர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் திட்டமிடப்பட்டு நடக்கின்றன. திருவாடானை தாலுகாவில் ஆக.,1 முதல் கணக்கெடுப்பு பணிகள் முறைப்படி துவங்கப்பட்டன. இப்பணிக்காக சிறப்பு பயிற்சி பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கணக்கெடுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, வீடுகள் தோறும் நேரில் சென்று விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கணக்கெடுப்பு துவங்கி 11 நாட்கள் ஆகியும் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை. தாலுகா முழுவதும் இதுவரை கணக்கிடப்பட்ட புள்ளி விபரங்களின் படி 1 சதவீதம் மட்டுமே கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. கணக்கெடுப்பு பணிகள் இவ்வளவு மந்தமாக நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு செல்லும் போது வீடுகள் பூட்டியிருப்பது, மக்கள் பணிகள் நிமித்தமாக வெளியே சென்றிருப்பது மற்றும் கேட்கப்படும் விபரங்களுக்கு தேவையான ஆவணங்களை உடனே தேடி எடுக்காமல் காலதாமதம் செய்வது, சில இடங்களில் மக்கள் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு சரியான தகவல்களை வழங்க தயங்குவதும், சந்தேக கேள்விகள் எழுப்புவதும் தமாதத்திற்கு காரணமாகின்றன. இது குறித்து திருவாடானை தாசில்தார் ஆண்டி கூறுகையில், அரசின் திட்டங்கள் மற்றும் நன்மைகள் தாலுகா மக்களுக்கு சரியாக சென்றடைய இந்த மக்கள் தொகை புள்ளி விபரங்கள் மிகவும் அவசியம். எனவே வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு எவ்வித தயக்கமின்றி முழுமையான, துல்லியமான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும். தாலுகாவின் மேம்பாட்டிற்கு இந்த கணக்கெடுப்பு முக்கியமானது என்பதால் மக்கள் இதில் முழு அக்கறை காட்டி ஒத்துழைக்க வேண்டும் என்றார். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி