மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு தற்போது வரை சம்பளம் வரவு வைக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முதுகுளத்துார் பேரூராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணி ஆக.,1ல் துவங்கி 31 வரை நடந்தது. இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு நேரடியாக வீட்டிற்கு சென்று தகவல்களை சேகரித்தனர். இதில் குடும்பத்தில் வசிப்பவர்கள் எண்ணிக்கை, சொந்த வீடா ,வாடகை வீடா , அலைபேசி எண் உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்பட்டு தகவல்களை சேகரித்துள்ளனர். இதற்கான அனைத்து பணிகளையும் முடித்துள்ளனர். தமிழகத்தில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பளம் அவரவர் வங்கிக் கணக்கில் வர வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுகுளத்துார் பேரூராட்சி பகுதிகளில் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தற்போது வரை சம்பளம் வரவு வைக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு விரைவில் சம்பளம் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.