திருப்புல்லாணி பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவம் காப்பு கட்டுதலுடன் துவக்கம்
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் தனி சன்னதியாக பட்டாபிஷேக ராமசுவாமி கோயில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய சைத்ரோத்ஸவ பெருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அனுக்ஞை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 10:30 மணிக்கு பட்டாபிஷேக ராமர் சன்னதி முன்புறமுள்ள கொடி மரத்தில் கொடிப்பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ராமபிரான், லட்சுமணன், சீதா பிராட்டியார், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு விசேஷத் திருமஞ்சனம் நடந்தது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பை புற்களால் சுற்றி கட்டப்பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு மாலைகள் சூட்டப்பட்டது.அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பத்து நாட்களும் சிம்மம், அனுமார், கருட சேவை, புன்னை வாகனம், சேஷ வாகனம், யானை, ஹம்ச வாகனங்களில் பட்டாபிஷேக ராமசுவாமி நான்கு ரத வீதிகளிலும் உலா வருகிறார். மே 8ல் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. மே 11ல் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பெரிய தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.