வைகையை காக்க ரூ.30.48 கோடியில் திட்டம் துாய்மை இந்தியா 2.0; கழிவுநீர் குழாய், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் துாய்மை இந்தியா 2.0 திட்டத்தில் ரூ.30.48 கோடியில் புதிய குழாய் பதிக்கும் பணி, சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் வைகை ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கலக்கிறது. இதனை தடுக்க சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. இந்நிலையில் காட்டுப்பரமக்குடி முதல் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ரூ.10.43 கோடியில் கழிவு நீர் பைப் லைன் அமைக்கப்படவுள்ளது.கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் ரூ.20.05 கோடியில் தண்டராதேவி பட்டணத்தில் உள்ள நகராட்சி புல் பண்ணையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நகராட்சி தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் குணா, நகராட்சி இன்ஜினியர் செல்வராணி முன்னிலை வகித்தனர். உதவி இன்ஜினியர் சுரேஷ்குமார் வரவேற்றார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் படி வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்பட்டு வைகையின் புனிதம் பாதுகாக்கப்படும் என தலைவர் சேது கருணாநிதிகூறினார்.