தேங்காய் விளைந்தும் தேவை அதிகரிப்பால் விலை உயர்வு; வியாபாரிகளிடம் கிலோ ரூ.75க்கு விற்பனை
திருப்புல்லாணி: ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி ரெகுநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கிராமங்களில் தென்னை விளைச்சல் உள்ளபோதும், தேவை அதிகரிப்பால் விலை அதிகரித்து அதிக பட்சமாக கிலோ ரூ.75 வரை விற்கிறது.முத்துப் பேட்டை, பெரியபட்டினம், நயினாமரைக்கான், பத்திராதரவை, வண்ணாங்குண்டு, தினைக்குளம் உள்ளிட்ட இடங்களில் விளைச்சல் இருந்தும் தென்னை பராமரிப்பு, தொழிலாளர்கள் கூலி உயர்வு, தென்னையில் நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு இதர செலவினங்களால் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.தென்னை விவசாயிகள் கூறியதாவது: நடப்பாண்டில் தேங்காய் விலை உயர்வு சமாளிக்க முடியாததாக மாறிவிட்டது.தென்னந்தோப்பு உரிமையாளர்களிடம் வாங்க கூடிய வியாபாரிகள் தேங்காய் கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கின்றனர். சில்லறையாக ரூ. 70 முதல் ரூ.75 வரை கடைகளில் விற்கிறது.ரெகுநாதபுரம், முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்த தேங்காய்கள் காங்கேயம், வெள்ளக்கோயில், ஈரோடு, பவானி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கக்கூடிய எண்ணெய் தொழிற்சாலைகளுக்கு வியாபாரிகள் மூலம் மொத்தமாக அனுப்பி வைக்கப்படுகிறது.இளநீர் ஒன்று ரூ. 60 முதல் 70 வரை விற்கின்றனர். தென்னை விவசாயிகளுக்கு உரிய மானியங்களை வழங்கிடவும், பூச்சி தாக்குதல் உள்ளிட்டவைகளிடமிருந்து உரிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் வேளாண்மைத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.