தேங்காய் வரத்து குறைவால் விலை உயர்வு: கிலோ ரூ.70, ஒரு காய் ரூ.40
ராமநாதபுரம்; போதிய மழையின்றி தென்னை காய்ப்பு குறைந்துள்ள நிலையில் வெளியூர்களில் இருந்தும் வரத்தின்றி ராமநாதபுரத்தில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.70க்கும், ஒரு காய் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 8420 எக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் உட்பட கடற்கரையோர கிராமங்களில் தென்னை மானாவாரியாக அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதேபோல ரெகுநாத புரம், பத்ராதரவை, வாலந்தரவை, பெரியபட்டினம் உள்ளிட்ட இடங்களில் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகள் பெரும்பாலும் மணற்சரிவாகவும், தென்னைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் அங்ககப்பொருட்களின் அளவு வெகுவாக குறைந்தும் காணப்படுகின்றது. குறிப்பாக இந்தாண்டு கோடை மழையின்றி தென்னையில் காய்ப்பு குறைந்துள்ளது. இதுபோன்று வெளிமாவட்டங்களில் இருந்தும் தேங்காய் வரத்தின்றி விலை அதிகரித்துள்ளது. கடந்த ஜூனில் கிலோ ரூ.50க்கு விற்றது தற்போது ரூ.70க்கு விற்கிறது. ராமநாதபுரம் சந்தையில் சில்லரை விலையில் ஒரு காய் ரூ.40க்கும், மூன்றுதேங்காய்கள் ரூ.100க்கு விற்கின்றனர்.