| ADDED : பிப் 12, 2024 04:43 AM
திருக்கல்யாணம் கோலாகலம் பரமக்குடி; -பரமக்குடி வண்டியூர் பெருமாள் கோயிலில், நுாதன பஞ்சலோக விக்கிரக பிரதிஷ்டை மற்றும் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த, வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு நுாதன பஞ்சலோக விக்ரக பிரதிஷ்டா விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை புதிய விக்கிரகம் வெள்ளோட்டம் நடந்தது.நேற்று 2ம் கால யாக பூஜைகள், காலை 9:00 மணிக்கு மகாபூர்ணாகுதி நிறைவடைந்து, புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகியது. பின்னர் விக்கிரகங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து மூலஸ்தானத்தில் பெருமாள் சேர்க்கை ஆகினார். காலை 10:30 மணிக்கு தொடங்கி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு பெருமாள் பட்டுப் பல்லக்கில் வீதி வலம் வந்தார். ஏற்பாடுகளை பரமஸ்வாமி நண்பர்கள், சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர்.