பரமக்குடியில் இரவில் தொடர் பனி மூட்டம்: பகலில் கொஞ்சம் வெயில்... மழை
பரமக்குடி : பரமக்குடியில் பகல் நேரங்களில் கொஞ்சம் வெயிலும், மழையுமாக இருக்கும் நிலையில் இரவு நேரங்களில் பனி மூட்டம் நிலவுகிறது. பரமக்குடியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை மாதக்கணக்கில் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் விவசாயிகள் ஆடி பட்டம் தேடி விதை என்ற நிலைக்கேற்ப எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் இருந்தனர். தொடர்ந்து அனைத்து நீர் நிலைகளும் காய்ந்தது. இந்நிலையில் சில நாட்களாக பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது வானம் மேக மூட்டமாகி மழையும் பொழிகிறது. அக்.12ல் 2.60 மி.மீ., மழை பெய்த நிலையில் அதற்கு முன் பரவலாக 20 மி.மீ.,க்கு மேல் மழை பெய்தது. இந்நிலையில் மாலை 6:30 மணி துவங்கி பனிப்பொழிவு அதிகளவில் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அதிகளவில் குளிர் நீடிக்கிறது. மேலும் மலை வெயில் விட்டு விட்டு வந்த சூழலில் கொசு உற்பத்தி அதிகளவில் உள்ளதால் மக்கள் துாக்கத்தை தொலைக்கும் நிலை உள்ளது. ஆகவே நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.