மேலும் செய்திகள்
பராமரிப்பின்றி காணப்படும் பாரதியார் வணிக வளாகம்
04-Nov-2024
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி வணிக வளாகத்தில் கடைகள் சேதமடைந்த நிலையில் கழிவு நீருக்கு மத்தியில் மக்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். பரமக்குடி ஆஸ்பத்திரி ரோடு பகுதியில் நகராட்சி வணிக வளாகம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு 50க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள், மெக்கானிக் கடை, ரேஷன் கடைகள் என அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து கட்டடம் சேதமடைந்து வரும் நிலையில் அதில் குடியிருப்போர் சீரமைத்து வருகின்றனர். இங்கு இரண்டு ரேஷன் கடைகள் செயல்பட்ட நிலையில் தற்போது ஒரு கடை மாற்று இடத்திற்கு சென்றுள்ளது. தொடர்ந்து இயங்கி வரும் கடையில் ரேஷன் பொருட்கள் வைக்க முடியாமல் ஊழியர்கள் தவிக்கின்றனர். ஒவ்வொரு முறை அதிக மழை பெய்யும் போதும், ஒரு அடிவரை தாழ்வான கடையில் கழிவுநீர் புகும் நிலை உள்ளது. மேலும் கூரையும் சேதமாகி மழை நீர் கசிவதால் கட்டடத்தை சீரமைத்து பொருட்களை பாதுகாக்க போராடி வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்டுகள் உள்ள நிலையில் இங்கு செல்லும் மக்கள் சகதிக் காடாகி உள்ள கழிவுநீருக்கு மத்தியில் சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் அனைத்து வகை கடைகளில் உள்ள உணவுப் பொருட்களால் மக்களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்படுகிறது. ஆகவே வணிக வளாகத்தை சீரமைப்பதுடன் அப்பகுதியில் எளிதாக சென்று வரும் வகையில் மேடாக்கி ரோடுகளை அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
04-Nov-2024